பிலிப்பைன்ஸ் பயணமானார் ஜனாதிபதி

Print lankayarl.com in முக்கிய

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது அழைப்பை நினைவுகூரும் வகையில் அந்நாட்டுக்கான நான்கு நாள் அரச முறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (15) இரவு மனிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரை அந்நாட்டின் வர்த்தக முதலீட்டு அமைச்சர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் தூதுவர் அலுவலகமொன்றை திறந்துவைத்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின. 1973ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக அம்மையார் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிலிப்பைன்ஸுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். அதன் பின்னர் சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றுவதற்காக பல தலைவர்கள் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தாலும் பிலிப்பைன்ஸிடமிருந்து இராஜதந்திர மட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை புதிய துறைகளை நோக்கி விரிவுபடுத்தி இரண்டு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி அவர்கள் நாளைய தினம் மனிலா நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் தேசிய வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகையான மலகன்யன்க் மாளிகையில் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்ட் அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை வரவேற்பதற்காக விசேட நிகழ்வொன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு, கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் அரச தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து கைச்சாத்திடப்படவுள்ளன.

தனது விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் மனிலா நகரில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் மற்றும் லொஸ் பெனோஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அவர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹினோ நாகாஓ அவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்