கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதித்த மத்திய அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Print lankayarl.com in முக்கிய

மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதித்த மத்திய அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பெரும் பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை நடந்த இந்த கூட்டத்தில் திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், வீ.அன்புராஜ், கலி. பூங்குன்றன் (திராவிடர் கழகம்) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், எம்.எல்.ஏ., யூசுப் குலாம் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிகுமார், அப்துல் சமது, கோவை உமர் (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், கஜா புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழகத்தில் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அழித்தொழித்து, குடிநீர் சேகரிப்பதற்காக ஏற்கனவே தாய்மார்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பாஜ அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கட்சி பேதம் கருதாமல் பொதுநலனுக்காக ஒன்றிணைந்து, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஏகோபித்த உணர்வுகளையும் ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்தி விட்டு, தேர்தல் ஆதாயம் மட்டுமே கவனத்தில் கொண்டு நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அல்லது தமிழகம் புதிய அணை எதுவும் கட்டக் கூடாது. காவிரி விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும். மத்திய அரசுக்கு இதில் தலையிடும் அதிகாரம் கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக, கர்நாடகாவில் புதிய அணை கட்ட மத்திய பாஜ அரசு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சியாகும்.

கடிதம் எழுதி விட்டாலே கடமை முடிந்து விட்டது என்று அதிமுக அரசு, அலட்சியத்தின் மொத்த உருவமாக இருந்ததால்தான் இன்றைக்கு, மத்திய அரசு விளைவுகளைப் பற்றிய சரியான மதிப்பீடும் பார்வையும் இல்லாமல், இந்த அனுமதியை சர்வ சாதாரணமாக வழங்கி தமிழக மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது; வெந்தணலில் தள்ளுகிறது. அடிக்கடி மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திக்கும் அமைச்சர்களும், முதல்வரும் மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று அறிவித்தாலும், மேகதாது அணை கட்டுவதற்கான மத்திய அரசு அனுமதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது. எனவே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப் பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக் கூடாது எனவும் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.அதிமுக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த அனுமதியை ரத்து செய்ய தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடைபெறவிருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமென இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி வருகின்ற 2018 டிசம்பர் 4ம் தேதி காலை 10 மணியளவில் திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டம் தீர்மானிக்கிறது. மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.